கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி வட்டம், பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைப் பகுதியில் உள்ள ஜுஜுவாடி, கக்கனூர், அந்திவாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு, வாகனங்கள் கணக்கெடுப்பு, வாகன ஓட்டுநர்களின் உடல் வெப்பப் பரிசோதனை மற்றும் ஆன்லைன் பதிவு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாநில எல்லைப் பகுதியில் உள்ள ஓசூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஓசூர் அருகே மாநில எல்லைப்பகுதியில் உள்ள பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகள் வருகை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வுப் பணியின் போது மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.