கரோனாவிற்கு குமரி மாவட்டத்தைச் சேர்ந்தோர் மரணமடைந்திருப்பது இரண்டாக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று குறித்த பரிசோதனை 7,716 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கடந்த 32 நாட்களாக யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை.
அதே நேரம் சென்னை உட்பட வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்களால் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருவோர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குமரி மாவட்டத்தில் மொத்தம் 311 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று ஏற்பட்டவரின் வீடு உள்ள குலசேகரம் செறுதிகோணம் கட்டுப்பாட்டு வளையத்தில் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தொடர் பரிசோதனையில் 14 நாட்களுக்குப் பின்னரும் அங்கு நோய்த்தொற்று இல்லாததால் நேற்று முதல் கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து செறுதிகாணம் விடுவிக்கப்பட்டது. மேலும் ஏற்கெனவே சென்னையில் இருந்து புற்றுநோயுடன் சிகிச்சைக்காக வந்த மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
குமரி மாவட்டத்தில் கரோனாவிற்கு மரணமடைந்த முதல் நபர் என்றிருந்த நிலையில், குமரி மாவட்டம் அருமனையை அடுத்த குழிச்சல் பகுதியைச் சேர்ந்த 48 வயது கட்டிடத் தொழிலாளி ஒருவர், துபாய் அஜிமான் என்ற இடத்தில் வேலை செய்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கரோனா தொற்று ஏற்பட்டு துபாயில் இறந்து போனார்.
இதனால் கரோனாவிற்கு மரணமடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.