கடந்த கால விபத்துகளிலிருந்து என்எல்சி நிர்வாகம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 15) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த 7-ம் தேதி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் ஆறாவது பாய்லர் வெடித்து இதுவரை 4 தொழிலாளிகள் மரணம் அடைந்திருக்கிறார்கள்; இதர 4 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள்; வேறு பலர் காயமடைந்துள்ளனர் என்கிற செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலையும், முழுமையான ஆதரவையும் தெரிவிப்பதோடு, இந்தத் துயரத்துக்கு என்எல்சி நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கடந்த கால விபத்துகளிலிருந்து நிர்வாகம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. 2016-ல் 5-வது பாய்லரும், 2019-ல் 6-வது பாய்லரும் வெடித்து விபத்து ஏற்பட்டபோது அதற்கான காரணங்களை பரிசீலித்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால், அதனை நிர்வாகம் செய்யவில்லை.
மேலும், பராமரிப்புக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பாய்லர் கட்டமைக்கும் பிஎச்இஎல் போன்ற நிறுவனங்களின் உயர் தொழில்நுட்பத் திறனைக் கணக்கிலெடுத்து அவர்களிடம் பராமரிப்புப் பணியை ஒப்படைக்காமல், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் குறைந்த செலவில் உள்ளூர் காண்ட்ராக்ட் மூலம் அவசரகதியில் செய்யப்படுவது விபத்துக்கு ஒரு முக்கிய காரணமாக தெரியவருகிறது.
மேலும், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பதும், தொலைநோக்குப் பார்வையுடன் முறையான கண்காணிப்பு செய்யாமலிருப்பதும், பாதுகாப்பு சாதனங்கள் விபத்தின்போது தேவைப்படும் உபகரணங்கள் போன்றவற்றின் பற்றாக்குறையும், நிர்வாகத்தின் அக்கறையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. இது தொழிலாளிகளின் உயிரை மலிவாக கருதும் செயலாகும்.
தற்போது இந்த விபத்தின் காரணமாக தொழிலாளிகள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கி அவர்களது உயிரும் வாழ்வும் மதிக்கப்படுகிறது என்கிற உணர்வை உருவாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை நிர்வாகம் உடனடியாக எடுத்திட வேண்டும்;
1) மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு நிர்வாகம் அறிவித்துள்ள ரூபாய் 25 லட்சம் போதாது. எனவே, அதனை உயர்த்தி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு போதுமான இழப்பீடும், மீண்டும் பணியில் சேர முடியாதவர்களுக்கு அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்று வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டும்.
2) விபத்து நடந்ததற்கான காரணங்களைப் பரிசீலிக்க உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்று அமைத்து அதில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு இதில் கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3) எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதலையும் உருவாக்கிட வேண்டும்
என என்எல்சி நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது"
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.