திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை அருகே, மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் வழங்கி பிரச் சாரத்தில் ஈடுபட்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகி யோரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் சட்டக் கல்லூரி மாணவி ஆ. நந்தினி. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மது வுக்கு எதிராக தொடர் போராட் டங்களை நடத்தி வருகிறார். அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது, இவரையும், இவரது தந்தையையும் போலீஸார் பலமுறை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் சட்டப்பேரவை முன்பாக வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் அறி வித்துள்ளார்.
நேற்று திண்டுக்கல் பஸ்நிலை யம், ரயில்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தந்தையுடன் சென்ற மாணவி நந்தினி, பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங் கினார். பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடைக்குச் சென்ற நந்தினி, மது பாட்டில்களை வாங்கி வந்தவர்களிடம் மதுவால் ஏற்படும் தீமைகளை விளக்கினார்.
இதையடுத்து, அங்கு வந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸார் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடு பட்டதாக தந்தை, மகளை கைது செய்து அழைத்துச் சென்றனர்.