மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தார்களா என்று தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து சினேகன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இந்திய அளவில் கரோனா தொற்று எண்ணிக்கையில் தமிழகம் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
டாஸ்மாக் திறப்பு, தன்னார்வலர்களை அரசு நிராகரித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தமிழக அரசைத் தொடர்ச்சியாக சாடி வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து இன்று (மே 14) காலை தனது ட்விட்டர் பதிவில், "முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
கரோனா பாதிப்பில் 8-ம் இடத்திலிருந்து 2-ம் இடத்தை எட்டிப் பிடித்துவிட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு" என்று பதிவிட்டு இருந்தார் கமல்.
கமலின் இந்தப் பதிவை மேற்கொளிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த பாடலாசிரியர் சினேகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"கரோனா கொன்ற உயிர்களை விட இந்தக் கொள்ளையர்கள் கொன்று கொண்டிருக்கும் உயிர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இவர்கள் மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வந்தார்களா? இல்லை தங்களின் தேவைக்காக அரசியலுக்கு வந்தார்களா? என்பது வெட்டவெளிச்சம் ஆகிறது இப்போது''.
இவ்வாறு சினேகன் தெரிவித்துள்ளார்.