சென்னையில் இருந்து வந்த தகவலை மறைத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நரம்பியல் தொடர்பான சிகிச்சைக்காக சேர்ந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு கரோனா வார்டில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட தொடர்பில் இருந்த 70 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த 34 வயது லாரி டிரைவர் ஒருவர் கடந்த 11-ம் தேதி சென்னையில் இருந்து ஊருக்குச் செல்வதற்காக மீன் ஏற்றுமதி நிறுவனத்துக்குச் சொந்தமான லாரியில் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குச்சாலை பகுதியில் இறங்கிய அவருக்கு திடீரென கை கால்களில் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே உறவினர் ஒருவரின் உதவியுடன் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு சில மணி நேரம் சிகிச்சை பெற்ற நிலையில் அவரை மாலையில் அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு நரம்புக் கோளாறு தொடர்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த இளைஞர் சிகிச்சைக்கு சேர்ந்த போது தான் சென்னையில் இருந்து வந்த தகவலை மறைத்துவிட்டு, ராமநாதபுரத்தில் இருந்து வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தான் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சந்தேகத்தின் பேரில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று மாலையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று அவரது உடல் நிலை திடீரென மோசமானது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அரசு மருத்துவமனையில் 40 பேரும், தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அவரது உறவினர்கள், உடன் தங்கியவர்கள் 10 பேரும் என மொத்தம் 70 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.