தமிழகத்தில் சில அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் ‘கரோனா’ வார்டு பணியாளர்களுக்கு தமிழக அரசு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் வழங்கும் பயனாளிகள் பட்டியல் தயாரிப்பில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் மருத்துவக்கல்வி இயக்குனரகம் அந்த வார்டில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்கள் உள்பட அனைத்து நிலைப் பணியாளர்கள் விவரங்களையும் அளிக்கும்படி டீன்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ‘கரோனா’ வார்டுகளில் துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்கள் தவிர உதவிப் பேராசிரியர்கள் உள்பட மற்ற மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ‘கரோனா’ வார்டில் ஒரு உதவிப் பேராசிரியர், 4 பட்டமேற்படிப்பு மாணவர்கள், 7 செவிலியர்கள், ஒரு ஆண் மற்றும் பெண் மருத்துவப் பணியாளர், ஒரு மருந்தாளுநர், 2 ஆய்வக நுட்புனர்கள், ஒரு செவிலியர் உதவியாளர், 2 ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 2 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்.
‘கரோனா’வுக்கு உலகமே அஞ்சி ஒதுக்கி நிற்கும்நிலையில் இவர்கள், ‘கரோனா’ நோயாளிகளை நேரடியாக அணுகி சிகிச்சை அளித்து பராமரிப்பதால் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாதம் சிறப்பு ஊதியம் வழங்குவதாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்த சிறப்பு ஊதிய தொகையை வழங்குவதற்காக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவக்கல்லூரி ‘டீன்’களுக்கும் அறிக்கை அனுப்பி, ‘கரோனா’ வார்டில் பணியாற்றியவர்கள் விவரம் கேட்டுள்ளது. இதில், மதுரை உள்பட சில மருத்துவக்கல்லூரிகளில் ‘கரோனா’ வார்டுகளில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை மட்டும் பட்டியல்தயாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு ‘கரோனா’ வார்டில் பணிபுரிந்த மற்ற பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், அவர்கள் மருத்துவக்கல்வி துறை இயக்குனரகத்திற்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது மருத்துவக்கல்வி இயக்குனரகம்,அனைத்து மருத்துவகல்லூரி மருத்துவமனை ‘டீன்’களுக்கும் ‘கரோனா’ வார்டில் பணிபுரிந்த அனைத்து நிலை பணியாளர்கள் விவரத்தையும் நாளைக்குள் (15-ம் தேதி) அனுப்பிவைக்கும்படி கடிதம் அனுப்பியுள்ளது. அதனால், தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமில்லாது இந்த வார்டில் பணிபுரிந்தமருத்துவப் பணியாளர்கள், செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர் மற்றும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து புதுப்பட்டியல் தயாரிக்கும் பணி நடப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ‘கரோனா’ வார்டில் பணிபுரிந்த பணியாளர்கள் கூறியதாவது:
‘கரோனா’ வார்டில் மருத்துவர்கள், செவிலியர்களைப் போல் மற்ற துறை பணியாளர்களுக்கும் பணிகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டன. ஆய்வக நுட்புனர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்துள்ளனர். ‘கரோனா’ நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களை அந்த சிறப்பு வார்டுக்கு கொண்டு வந்து சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்புவது வரையிலான பணிகளில் மற்ற பணியாளர்களுக்கும் பங்கு உள்ளது. இரவுப் பணியில் 12 மணி நேரம் வரை நாங்களும் பணிபுரிந்துள்ளோம். ஆனால், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மட்டுமே இந்தப் பணியில் ஆபத்து இருப்பதாகவும், மற்றவர்களுக்கு இல்லை என்றும் ஆரம்பத்தில் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. தற்போது சேர்ப்பார்களா? என்று தெரியவில்லை. மருத்துவக்கல்வி இயக்குனரகம் ‘கரோனா’ வார்டில் பணிபுரிந்த அனைத்து நிலைப் பணியாளர்கள் விவரங்களையும், அவர்கள் ஊதியம் விவரம் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளதாக கூறுகிறார்கள்’’ என்றனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘மருத்துவக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படிதான் நாங்கள் ‘கரோனா’ வார்டில் பணிபுரிந்தரவர்கள் பட்டியலை அனுப்புகிறோம். எந்தக் குளறுபடியும் இல்லை, ’’ என்றார்