சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தென்மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காது கேளாதாதோர் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய முகவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார். மண்டல மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) எஸ்.ஜான்சன், மண்டல மேலாளர் (மார்க்கெட்டிங்) பி.முரளிதரன் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சென்னை துறைமுகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் துறைமுகத் துணைத் தலைவர் ஜெயக்குமார் கொடியேற்றினார். ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற விழாவில் மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா, வருமானவரி அலுவலகத்தில் முதன்மை தலைமை ஆணையர் ஏ.கே.வத்சவா, பாரத ஸ்டேட் வங்கியின் வட்டார அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் ராம், காமராஜர் துறைமுகத்தில் அதன் தலைவர் பாஸ்கராச்சார், ஐ.சி.எப். தொழிற்சாலையில் அதன் பொதுமேலாளர் அசோக் அகர்வால் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர்.