பங்கஜா ஸ்ரீனிவாசன்
கோவிட் -19 போரின் முன்னணியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களை உற்சாகப்படுத்தும்விதமாக ஊட்டி தாவரவியல் பூங்கா அவர்களை வரவேற்க தயாராகியுள்ளது.
அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா சில சிறப்பு பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு கொளுத்தும் கோடை வெயிலை மறக்க குளுகுளு ஊட்டியை யாரும் தேடி வரவில்லை. ஆயிரக்கணக்கில் குவியும் கூட்டம் இன்றி உதகையின் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. தாவரவியல் பூங்காவில் தென்றல் வீசுகிறது. ஆயிரக்கணக்கான காற்றில் பூக்கள், படபடக்கின்றன... ஆனால் அதைப் பார்க்கத்தான் ரசிக்கத்தான் யாரும் இல்லை, இதற்கு ஊரடங்குக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவா சுப்பிரமணியம் சாம்ராஜ் ஆகியோர் கரோனா போர்க்களத்தில் பணியாற்றிய முன்னணி போர்வீரர்களான தகுதியான பார்வையாளர்களுக்காக தோட்டத்தை திறக்க முடிவு செய்தனர்.
இதுகுறித்து உதகையின் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவா சுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:
சீசனுக்கு சரியான நேரத்தில் தோட்டத்தை தயார் செய்ய தனது குழு கடின உழைப்பை மேற்கொண்டது, சுற்றுலாப் பயணிகளை வரவேற்க நாங்கள் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தோம், திடீரென ஊரடங்கு வந்ததால் எல்லாம் வீணாகிவிட்டது. இதனால் அதற்காக உழைத்தவர்கள் முதல் திட்டமிட்ட அதிகாரிகள்வரை பலருக்கும் கடுமையான ஏமாற்றமாக இருந்தது.
ஆனால் இப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தோட்டம் சில தகுதியான சுற்றுலாவினரைக் காணப்போகிறது. கரோனா போர் வீரர்களுக்கு நாங்கள் இந்த அழகிய பூக்களைக் காட்டப் போகிறோம்.
நீலகிரிகளின் கரோனா செயல் வீரர்களுக்கு மரியாதை மற்றும் நன்றியுணர்வின் அடையாளமாக, தோட்டத்தின் அழகும் சீசனும் உச்சத்தில் இருக்கும்போது அதைப் பார்வையிட நாங்கள் அவர்களை அழைத்துள்ளோம்.
முதற்கட்டமாக நேற்று ஐம்பது செவிலியர்கள் தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்தனர். பராமரிப்பாளர்களாக அவர்கள் அனுபவித்த கொடூரமான நாட்களுக்குப் பிறகு அவர்கள் மலர்களிடையே எவ்வளவு மகிழ்ந்தார்கள் என்பதைப் பார்ப்பது அருமையாக இருந்தது.
மாவட்ட ஆட்சியரும் நானும் அவர்களை ரோஜாக்கள் மற்றும் டஹ்லியாக்களுடன் வரவேற்றோம். தங்களின் முதல் வருகையின்போது, செவிலியர்கள் சூரியவெளிச்சம் மிக்க அந்த நாளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் பாடி, தங்கள் மொபைல் போன்களிலிருந்து இசைக்கு நடனமாடினர்!
சிறப்பு மலர் கண்காட்சி கேலரியில் கிட்டத்தட்ட 30,000 மலர் பானைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, அவை அனைத்தும் அழகை வாரியிறைத்து மகிழ்ச்சி ஊட்டுபவை.
அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கு எங்கள் விருந்தினர்கள் வேறு யாருமல்ல, செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார மற்றும் நகராட்சி ஊழியர்கள், வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர்தான். சமூக இடைவெளி பராமரிப்பதற்காக அடுத்த பதினைந்து நாட்களில் வரும் விருந்தினர்பட்டியலை வேறுபடுத்தி தயாரித்துள்ளோம். இதில் முதல் வாரம் அல்லது 10 நாட்களுக்கு, மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் வருகை தருவார்கள்.
கடந்த சில மாதங்கள் இதற்காக உழைத்த பணியாளர்களின் அர்ப்பணிப்பு வீண்போகவில்லை. அனைத்து முயற்சிகளையும் எல்லாவற்றிற்கும் மதிப்புள்ளதாக ஆகிவிட்டது. COVID-19 நெருக்கடியின் முன்னணி தொழிலாளர்களை விட சிறந்த தகுதியுள்ள வேறு யாரையும் நாங்கள் நினைக்கவில்லை என்பதால், தோட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட முதல் விருந்தினர்கள் அவர்களே.''
இவ்வாறு உதகையின் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவா சுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்தார்.