தமிழ்நாட்டில் சுமார் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அதில் 50 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். கரோனா காலத்திலும் தினமும் கடை திறந்து, மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்கள், செவிலியர்களைப் போல இவர்களின் சேவையும் முக்கியமானதுதான். ஆனால், தங்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத சூழலே நிலவுவதாக அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில், வரும் 18-ம் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
“தமிழ்நாடு முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம். இந்த கரோனா காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக யார் யார், எப்போது கடைக்கு வர வேண்டும் என்று டோக்கன்களையும் வீடுதோறும் விநியோகித்து வருகிறோம். ஏற்கெனவே பொதுப் போக்குவரத்து இல்லாததால் எங்கள் வேலைப் பளுவும், அலைச்சலும் மிகமிக அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரையில் எங்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை, சத்து மாத்திரை போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட அரசு வழங்கவில்லை.
ஊழியர்களுக்கு அரசு கொடுக்கும் சிறப்பூதியத்திலேயே அதை வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள் அதிகாரிகள். விற்பனையாளருக்கு வெறுமனே 2,500 ரூபாயும், எடையாளருக்கு 2,000 ரூபாயும் மடடுமே சிறப்பூதியமாக அரசு வழங்குகிறது. தினப்படியாக ரூ.200 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவுகள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
இது ஒருபுறமிருக்க, கடைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை முறையாக ஒதுக்கீடு செய்யாமல் விடுவதால், நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. கரோனா தடுப்புப் பணியில் உள்ள அரசு பணியாளர்கள் அனைவருக்கும் 50 லட்ச ரூபாய் மதிப்பில் குழு காப்பீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆனால், அதிலும் நாங்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த நேரத்தில் வேலைக்குச் செல்லும் வழியில் ரேஷன் கடை பணியாளர்கள் இருவர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்தக் கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி வருகிற 18-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில், அந்தந்த மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.”
இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.