இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார தொகுப்புத் திட்டத்தை அறிவித்ததற்காக, பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை 'சுயசார்பு இந்தியா' என்ற பெயரில் அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான பொருளதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (மே 13) அறிவி்த்தார்.
இந்நிலையில், இத்திட்டங்களை அறிவித்ததற்காக, நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (மே 14) தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் விவரம்:
"இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு சமமான ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார மற்றும் விரிவான தொகுப்புடன் கூடிய 'சுயசார்பு இந்தியா' திட்டம் குறித்து பிரதமர் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மின்சார விநியோக நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தொழில்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உதவுவதற்காக 15 முக்கியமான நடவடிக்கைகளை அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு துறைகளை உள்ளடக்கி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், சரியான நேரத்தில் நிதி நிவாரணம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் பொருளாதார மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
மற்ற துறைகளுக்கான நிவாரண உதவிகள் மற்றும் நிதியுதவிக்கான அவசர தேவையில் இருக்கும் மாநில அரசுகளுக்கான அடுத்தகட்ட அறிவிப்புகளை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். நிதி ரீதியான நிலையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளும், இனி இந்திய அரசு அறிவிக்க உள்ள அறிவிப்புகளும் இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதை எளிதாக்கும் என நம்புகிறேன்"
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.