புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பண்டா, இயக்குநர் மோகன்குமார்.  
தமிழகம்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறவில்லை: சுகாதாரத்துறை தகவல்  

அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் சமூகத் தொற்றாகப் பரவவில்லை என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பண்டா, இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் இன்று (மே 14) செய்தியாளர்களிடம் கூறிதாவது:

"புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேரும், காரைக்காலில் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் 4 பேரும் நலமுடன் இருக்கின்றனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரியில் மொத்தம் 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

அதுபோல் நேற்று பல்வேறு இடங்களில் இருந்து 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதுவரை 4,919 பரிசோதனைகள் செய்துள்ளோம். அதில் 4,832 நெகட்டிவ் என்று வந்துள்ளது. மேலும் 4.59 லட்சம் குடும்பங்களைக் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வரும் 17-ம் தேதிக்குப் பிறகு தளர்த்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்து கொண்டிருக்கும் வெளிமாநிலத்தில் வேலை செய்வோரைச் சமாளிக்கும் விதமாக அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிப்பது, அவர்களை எப்படிச் சமாளிப்பது, அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி சிகிச்சை முறைகளை எப்படி நடத்துவது என்பது குறித்து நாங்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டோம்.

அதில் அனைவருக்கும் தடையின்றிச் சிகிச்சை அளிப்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளோம். அதனை அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலை தொழிலாளி, தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தது மட்டுமல்லாமல், பகுதி நேரமாக காய்கறி விற்று வந்துள்ளார். அதற்காக அவர் கோயம்பேடு மார்க்கெட் சென்று அங்குள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன் காரணமாக அவருக்குக் கரோனா பரவியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் கரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறவில்லை.

மேலும் தளர்வுகள் அதிகரிக்கும்போது நோயாளிகள் அதிகப்படியாக வர வாய்ப்புள்ளதால் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் நோக்கத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பதிவு செய்யும் நேரமான காலை 8 மணி முதல் 10.30 வரை என்பதை 11 மணி வரையிலும், நோயாளிகள் மருத்துவர் பார்க்கும் நேரம் காலை 8 மணி முதல் 11 மணி வரை என்பதை நண்பகல் 12 மணி வரையிலும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பண்டா, இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT