தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், கோவையில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இதே கட்டிடப் பணிகளுக்கு ஆதார சுருதியாக விளங்கும் கான்கிரீட் கலவை போடும் தொழிலோ இன்னமும் முடங்கியே கிடக்கிறது. இது கலவைத் தொழிலாளர்களை வருத்தமுறச் செய்திருக்கிறது.
கோவை சித்தாபுதூர் 100 அடி சாலையில் நூற்றுக்கணக்கான கலவை இயந்திரங்கள் 45 நாட்களாக வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பது இந்தத் தொழிலில் ஏற்பட்டிருக்கும் முடக்கத்தை உணர்த்துகிறது.
சித்தாபுதூர் பகுதியில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளனர். அதில் பாதிப் பேர் கட்டிடங்களுக்குக் கான்கிரீட் கலவை போடும் பணி செய்பவர்கள்தான். பொதுவாக, கான்கிரீட் கலவை இயந்திரம் ஏற்றிச்செல்லப்படும் வேனிலேயே பத்து முதல் பதினைந்து தொழிலாளர்கள் வரை ஏறிச் செல்வார்கள். குறிப்பிட்ட கட்டிடத்தில் கலவை போடும் வேலையில் முழுமையாக ஈடுபடுவார்கள்.
இவர்களுக்கான ஒவ்வொரு நாள் கூலியும் அன்றன்றே வழங்கப்பட்டு விடும். உணவு வசதியும் செய்து தரப்படும். ஓரிடத்தில் கலவை போடும் பணி முடிந்தால் அடுத்தநாள் கலவை போடும் பணி எங்கே என்பதை இவர்களுடைய மேஸ்திரி அவர்களுக்கு அறிவித்துவிடுவார். அடுத்தநாள் அதிகாலை கலவை இயந்திரந்துடன் அத்தனை பேரும் குறிப்பிட்ட கட்டிடத்தில் ஆஜராகி விடுவர். இப்படி ஒரு நாள்கூட இந்தக் கலவை இயந்திரத்திற்கும், அதன் தொழிலாளர்களுக்கும் ஓய்வு இருக்காது.
இந்தக் கலவை இயந்திரங்களை சில கட்டிட பொறியாளர்களே சொந்தமாக விலைக்கு வாங்கி மேஸ்திரிகளின் கட்டுப்பாட்டில் வாடகைக்கு விட்டுவிடுவார்கள். சில மேஸ்திரிகள் தாங்களே இந்தக் கலவை இயந்திரங்களைச் சொந்தமாக வாங்கி வாடகைக்கு விடுவதுடன், தாங்களே இயக்கி அதற்குச் சம்பளமும் வாங்கிக் கொள்வார்கள். இப்படி பொறியாளர்களும், மேஸ்திரிகளும் ஆளுக்கு 3, 4 இயந்திரங்கள்கூட வைத்திருப்பதுண்டு.
ஏதாவது ஒரு கட்டிடத்தில் வேலை என்று சொன்னால் அங்கேதான் இந்தக் கலவை இயந்திரத்தைக் கொண்டு போய் நிறுத்துவார்கள். எனவே, இந்த இயந்திரங்களை ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கில் காண்பதென்பது அபூர்வம். கரோனா பொது முடக்கம் காரணமாகத்தான் இப்படி ஒரே இடத்தல் நூற்றுக்கணக்கான இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்றார்கள் இப்பகுதியில் உள்ளவர்கள்.
எல்லாம் சரி, ஒருபக்கம் கட்டிடப் பணிகள் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் நிலையில், கலவை மிஷின்கள் மட்டும் ஏன் வாடகைக்குப் போகவில்லை என இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேஸ்திரி விஜயன் தலைமையிலான குழுவினரிடம் கேட்டபோது, “கட்டிட வேலையில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற முடியும். இதில் அதற்குச் சாத்தியம் இல்லை. அதனால் கட்டிட வேலைகள் நடந்தாலும், கான்கிரீட் பணிகள் இப்போதைக்கு நடக்காது” என்று சொன்னவர்கள், அதை இப்படி விளக்கவும் ஆரம்பித்தனர்.
“இந்தக் காலத்தில் ரெடிமிக்ஸ்னு பெரிய, பெரிய ராட்சதக் கலவை இயந்திரங்கள் வந்துவிட்டாலும் சாதாரண மக்கள் தங்கள் கட்டிடத்திற்கு கான்கிரீட் போட இந்த கைக்கலவை மிஷினைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் கலவை போடும்போதுதான் முறையான கணக்கும், இயல்பான கலவையும் வரும். கான்கிரீட் ஸ்ட்ராங்காகவும் இருக்கும் என்று நம்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான கலவை மிஷின்கள் உள்ளன.
லாரியில் இரண்டு மிஷின்களோ, வேனில் ஒரு மிஷினோதான் ஏத்திட்டுப் போவோம். அதிலேயே 15 முதல் 20 பேர் ஏறிக்குவோம். இப்ப கரோனாவினால அப்படி ஒரு வாகனத்தில் பத்து பேர் ஏற முடியாது. அது மட்டுமல்ல, இந்தக் கலவை மிஷினை ஓரிடத்திற்குக் கொண்டுபோகணும்னா, உள்ளூர் மணியக்காரர்கிட்ட சான்றிதழ் வாங்கி, தாசில்தார் சீல் வாங்கிக் கொண்டு போகணும். பொதுப் போக்குவரத்து இல்லாததால ஆட்கள் வேலைக்கு வர்றதும் சிரமம்.
அதுமட்டுமில்ல, ஒவ்வொரு அடிக்கு ஒரு ஆள் நின்னு கலவைச் சட்டி வாங்கணும். கிரஷர், மணல், சிமென்ட், தண்ணின்னு ஆளாளுக்கு எடுத்து கலவை மிஷின்ல ஊத்தணும். இதுல எல்லாம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது. இத்தனை சிக்கல் இருக்கு. நாங்களும் வருமானம் இல்லாம தவிக்கிறோம். எப்படிப் பார்த்தாலும், ஊருக்குள்ளே கட்டிட வேலைகள் 90 சதவீதம் நடந்தாலும் அதன் வேலைகள் எல்லாம் கான்கிரீட் போடும்போது நின்னே தீரும். இதுக்கு மாற்று வழி ஏதாச்சும் செஞ்சு கொடுத்தாத்தான் இந்தக் கலவை மிஷின்கள் புறப்படும். எங்க வயிறும் நிறையும்” என்று எதிர்பார்ப்புடன் சொன்னார்கள் அந்தத் தொழிலாளர்கள்.