தமிழகம்

அதிகமாக பரிசோதனைகள் செய்ய வேண்டும்: ஊரடங்கில் முழு தளர்வு கூடாது: தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

செய்திப்பிரிவு

ஊரடங்கில் முழு தளர்வு கூடாது. அதிக அளவில் பரிசோதனைகள் எடுக்கவேண்டும். பரிசோதனைகள் தொடர்ந்து நடக்கவேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

தமிழக அரசால் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தொடர்ந்து ஆய்வு செய்து மாநில அரசுக்கு வழிகாட்டுதல்களைக் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு கட்ட ஊரடங்கு நீட்டிப்புக்கு முன் இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது. கடந்த இரண்டு முறையும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும், ஊரடங்கின்போது கடைப்பிடிக்கும் நடவடிக்கை குறித்தும் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்தது.

ஊரடங்கு முடிவடையும் நிலையில், இன்று மீண்டும் 19 பேர் கொண்ட நிபுணர் குழு முதல்வர் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்தி ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர், ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இன்று முதல்வர் குழுவுடன் 2 மணிநேரம் ஆலோசனை செய்தோம். இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஜெனீவாவிலிருந்து டாக்டர் சௌமியா கலந்துகொண்டார். அவரது ஆலோசனையும் எடுத்துக்கொள்ளப்பட்டது. நான் இப்போது சொல்வது நிபுணர் குழுவின் பரிந்துரை பற்றி. இதில் டாக்டர் சௌமியாவின் பரிந்துரையும் உள்ளது.

தமிழ்நாட்டின் பெரிய சாதனை என்னவென்றால் அதிக எண்ணிக்கை அளவில் பரிசோதனை செய்துள்ளோம். இதனால் என்ன லாபம் என்றால் எந்தெந்த மாவட்டங்களில், எந்த ஏரியாவில் அதிக பாதிப்பு உள்ளது என்பது குறித்த தெளிவான வரைபடம் கிடைக்கும்.

அந்தத் தகவலை வைத்துதான் அனைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரை என்னவென்றால் இந்தப் பரிசோதனையைக் குறைக்கவே கூடாது. அதிகப்படுத்தலாமே தவிர குறைக்கவே கூடாது. அதிக அளவிலான பரிசோதனை செய்வதன் மூலம் நோயின் பரவலை சரியாகக் கண்டுபிடிக்க முடியும்.

எவ்வளவு நோய்ப் பரவல் வந்தாலும் நாம் அதிகம் சோதனை செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் தொற்று இருப்பது குறித்து பயப்படக்கூடாது. ஆனால் எந்த ஏரியாவில் தொற்று அதிகம் உள்ளது என்பதை அறிவதுதான் முக்கியம். அதன் மூலம் அங்கு எடுக்கப்படவேண்டிய தடுப்பு நடவடிக்கையைச் செய்யமுடியும்.

அடுத்து நமது நோக்கம் என்னவென்றால் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிவது. தற்போது இருக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அதிகபட்சமாக கரோனா அறிகுறியுள்ள பாதியளவு மக்களையாவது உடனடியாக 3 நாட்களுக்குள் மருத்துவச் சிகிச்சைக்குள் கொண்டு வரவேண்டும். இதன் காரணம் என்னவென்றால் அவர்களால் பரவல் ஏற்படாது. குடும்பத்தாருக்குள், சமூகத்தில் பரவல் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனால் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

இவ்வளவு தொற்றுள்ளோர் இருந்தும் உயிரிழப்பு குறைவாக இருப்பதற்குக் காரணம் உடனடியாக அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்குக் கொண்டுவரப்பட்டதே ஆகும். இதைத் தொடர்ந்து செய்ய உள்ளோம். ஒரு நபருக்கு நோய் வந்தால் அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்கிற பட்டியலை குறைந்தபட்சம் 15 பேர் என எடுத்து அவர்களை எச்சரித்துத் தனிமைப்படுத்துகிறோம். அதனால்தான் நமக்கு முதலில் ஒரு பாதிப்பு வந்தது. அதைச் சரிசெய்தோம். இப்போது இரண்டாவதாக ஒரு பாதிப்பு வந்துள்ளது. அதையும் சரிசெய்து வருகிறோம்.

அரசு என்ன செய்கிறது என்றால் தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்தால் அவருடன் தொடர்புள்ள 20 பேரைக் கண்டறிகிறார்கள். அவர்களுக்குப் பரிசோதனை நடந்து அறிகுறி இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருக்கும்.

இருக்கிற நடைமுறையில் நாம் எதை எதைச் செய்யவேண்டும் என்றால் அதிக அளவில் கண்டறிவது, அதிக அளவில் பரிசோதனை, தொடர்புகளைக் கண்டறிவது, தனிமைப்படுத்துவது. இதைத் தொடர்ச்சியாகச் செய்து வந்தால் மட்டுமே தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

எது செய்தாலும் இது பேரிடர் நேரம். உலக அளவிலான பரவல் உள்ள நேரம். நோய்த்தொற்றே இல்லாத நிலையை உருவாக்க முடியாது. சில நேரம் நோய்ப் பரவல் அலை அதிகரிக்கும், குறையும். அதைப் பரவல் அதிகரிக்கும்போது கண்டறிந்து அந்தப் பரவல் இருக்கும் பகுதியைக் கண்டறிந்து சரியான நடவடிக்கை எடுத்துக் கட்டுப்படுத்திவிட்டால் மற்ற பகுதிகளுக்குப் பரவாது.

அலை பரவல் அதிகரிக்கும்போது பீதி அடையக்கூடாது. அதனால் ஒரு பயனும் இல்லை. நடவடிக்கையும், சமூகத்தின் பங்களிப்பும் முக்கியம். அதிகமானோர் ஒத்துழைக்கின்றனர். ஆனாலும் அது போதாது. அதை அதிகரிக்க வேண்டும். சமூக விலகல் மிக முக்கியம்.

தற்போது அனைத்தும் தளர்த்தப்படுகின்றன. அதனால் பணிக்குச் செல்வோர் சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பணிக்கு வருவோர் அனைவருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டும். முகக்கவசம் மிக முக்கியம். முகக்கவசம் அணியாமல் பணியில் ஈடுபடக்கூடாது.

யாராவது ஒருவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் வேலைக்கு வரக்கூடாது. அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானால் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஊழியர் வீட்டருகில் யாருக்காவது தொற்று இருந்தால் அவர் கட்டாயம் பணிக்குச் செல்லக்கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும்.

தற்போது ஊரடங்கு அடுத்தகட்டத்துக்குப் போகப் போகிறது. உடனடியாக ஊரடங்கைத் தளர்த்த முடியாது. நாங்கள் என்ன கருதுகிறோம் என்றால் ஊரடங்கு உடனடியாக விலக்கக்கூடாது. படிப்படியாகத்தான் விலக்க வேண்டும். முன்பிருந்ததுபோல் 100 சதவீதம் சாதாரண நிலை இனி இருக்காது. படிப்படியாகத் தளர்வு கொண்டுவரும்போது நாங்கள் பரிந்துரைப்பது சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்ட நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்''.

இவ்வாறு பிரதீப் கவுர் தெரிவித்தார்.

தொற்றுநோய் நிபுணர் குகானந்தம் கூறியதாவது:

“2 மணிநேரத்துக்கும் மேலாக முதல்வர், அமைச்சர்கள் குழுவினர் எங்கள் ஆலோசனைகளைக் கேட்டார்கள். நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படையில் அரசு செயல்படுகிறது என்று முதல்வர் கூறியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

பொது சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக இருந்த காரணத்தால் கடந்த சில மாதங்களாக நோய்த்தொற்று அதிகம் கண்டுபிடித்தாலும் இறப்புகள் குறைவாக உள்ளன. இது நல்ல விஷயம். அதேபோன்று வெளிநாடுகளிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்களைப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

இறப்புகள் அதிகம் பாதிப்பது நீரிழிவு, ரத்த நாள நோய், ரத்த அழுத்தம், இதய நோய், நீண்டகால நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள், கேன்சர் நோயாளிகள், எச்.ஐ.வி. நோயாளிகளைத்தான். இந்த வகையுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாதாமாதம் அளிக்கும் மருந்து, உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

சென்னையில் அதிக அளவில் தொற்று வருவதைப் பற்றி பீதியடைய வேண்டாம். அவற்றைக் கண்டறிந்து மிதிக்கும் நடவடிக்கை தொடரும். வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணிவது, சமூக விலகலைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தற்போது தளர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் அரசு சொல்வதைக் கடைப்பிடிக்க வேண்டும்”.

இவ்வாறு குகானந்தம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT