பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக, அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன், அதிமுக கிளைச் செயலாளர் யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய இருவரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மே 14) விழுப்புரம் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும். இதுவே நியாயமான தீர்ப்பாக இருக்கும். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பெண்களுக்குத் தீங்கிழைத்தால் பெண் இனமே ஒன்று சேரும். அவர்களுக்காக நானே முன்னின்று போராடுவேன். மாணவியின் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
கரோனா தடுப்பில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கரோனா பரிசோதனை அதிகமாக நடத்துவதால் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் ஒத்துழைத்தால் கரோனாவை ஒழிக்க முடியும்.
தற்போதைய சூழலில் அவசரப்பட்டு டாஸ்மாக் கடைகளைத் திறந்ததுதான் அரசு செய்த தவறு. மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. இதில் எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு என சில நாட்களில் தெரியவரும்.
கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும் இந்தியா வருங்காலத்தில் வல்லரசாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது"
இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.