தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படுபவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர், அரசு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் மூலமாக அந்த ஊரில் 12 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும் சுகாதாரத் துறையினர் கண்டறிந்தனர்.
இதேபோல் தேவதானம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சென்னையில் இருந்து வந்திருந்தார். அவரைத் தனிமைப்படுத்திக் கொள்ளச் சொல்லி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த ஊர் டாஸ்மாக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று மது வாங்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் காவல்துறை உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, வருஷநாடு மலை மீதுள்ள கடலைக்குண்டு எனும் ஊரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் வெளியே சுற்றித் திரிவதைக் கண்ட போலீஸார், அவர்கள் 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரோனா தொற்றைப் பரப்பும் வகையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே சென்றதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இந்தக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி அறிவித்துள்ளார்.