என்எல்சி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் ரூ.25 லட்சம் இழப்பீடு ஆகியவற்றை பாமக போராடிப் பெற்றுத் தந்துள்ளதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 14) வெளியிட்ட அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின்நிலையத்தின் ஆறாவது அலகில் கடந்த மே 7-ம் தேதி கொதிகலன் வெடித்த விபத்தில், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தனர். அவர்களில் நேற்று வரை 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்குவதில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் தாமதம் செய்து வந்தது.
அதைக் கண்டித்து, கடலூர் மாவட்ட பாமக சார்பில் இரு முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் நேற்று (மே 13) மாலை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது பாமகவின் கோரிக்கையை ஏற்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும், குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
அதன்படி, கொதிகலன் விபத்தில் உயிரிழந்த சர்புதீன், சண்முகம், பாவாடை, பாலமுருகன் ஆகிய 4 பேரின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் பணி வழங்குவதற்கான ஆணை, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதற்கான ஆணை ஆகியவற்றை பாமக குழுவினரிடம் என்எல்சி நிர்வாகிகள் வழங்கினர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக தலையிடாத நிலையில், பாமகவினர் உரிமைப் போராட்டம் நடத்தி இந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதற்காக கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் கோரிக்கையை நிறைவேற்றிய என்எல்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.