தமிழகம்

ஈரோட்டில் கட்டுப்பாடுகள் தளர்வால் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது; தொற்று இல்லாத நாமக்கல் மாவட்டம்: ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட 18 பகுதிகளிலும் கட்டுப்பாடு நேற்றுடன் நிறைவு பெற்றதையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகினர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 69 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கொல்லம்பாளையம் உள்ளிட்ட 10 பகுதிகளும், புறநகர் பகுதியில் கோபி, கவுந்தப்பாடி உள்ளிட்ட 8 இடங்கள் என மொத்தம் 18 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து 330 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 308 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொற்று இல்லை

கடைசியாக ஏப்ரல் 15-ம் தேதி 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கடந்த 28 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை. சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிய ஈரோடு மாவட்டம் தற்போது பச்சை மண்டலத்துக்கு மாறியுள்ளது.

இதையடுத்து, தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

அப்பகுதியில் கடைகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம் பேரூராட்சி, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நேற்றுடன் கட்டுப்பாடுகள் நிறைவடைந்த நிலையில், மாவட்டத்தில் அனைத்து கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இருப்பினும், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொற்று இல்லாத நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த 15 பேர் குணமடைந்தனர்.

இதையடுத்து, அவர்களை அவர்களது வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் மெகராஜ், வழியனுப்பி வைத்தார். அப்போது, ஆட்சியர் கூறிய தாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 5,600 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 77 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், நேற்று முன்தினம் வரை 62 பேர் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இன்று (நேற்று) 15 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒருவர் கூட இல்லை. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. கரோனா தொற்று மீண்டும் வர வாய்ப்பில்லை எனக் கூற இயலாது.

கபசுரக் குடிநீர்

குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களுக்கு 15 நாட்களுக் கான கபசுரக் குடிநீர், விட்டமின் சி, ஹோமியாபதி மருந்து மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய இரு கிட் வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் வழிமுறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகம் இருந்தால் தொலைபேசி எண்கள் மூலம் அவர்கள் தொடர்பு கொள்ளலாம். இன்னும் 14 நாட்களுக்கு கரோனா தொற்று இல்லாமல் இருந்தால் ஆரஞ்சு மண்டலமாக நாமக்கல் மாவட்டம் மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT