ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் எட்கார்ட் ஜீபாட். இவர் வியட்நாமில் உள்ள ஹனோய் நகரில் இருந்து துருக்கியில் உள்ள இஸ்தான்புல் செல்ல விமானத்தில் கடந்த மார்ச்மாதம் புறப்பட்டார். அந்த விமானம்டெல்லி வழியாக செல்லவிருந்தது. அதன்படி அவர் மார்ச் 18-ம் தேதி டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அதன்பிறகுதான் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக துருக்கிக்கான விமானப் போக்குவரத்தை மார்ச்18-ம் தேதி மத்திய அரசு தடைசெய்தது. அவரால் இந்தியாவை விட்டும் வெளியேற முடியவில்லை. அத்துடன் இந்திய விசா இல்லாததால், டெல்லி விமான நிலையத்தை விட்டும் வெளியில் வரமுடியவில்லை. அவரை ‘டிரான்சிட்’ பகுதியில் (விமான பயணிகள் செல்ல வேண்டிய இடத்துக்கு இடையில் வரும் நகரில் உள்ள விமான நிலையம்.) அதிகாரிகள் தங்க வைத்தனர்.
கடந்த 55 நாட்களாக டெல்லிவிமான நிலைய டிரான்சிட் பகுதியிலேயே தங்கியிருந்த ஜீபாட் நேற்று முன்தினம் அதிகாலை நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் புறப்பட்ட கேஎல்எம் ஏர்லைன்ஸின் நிவாரண விமானத்தில் சென்றார்.
இந்திய விசா கேட்டு ஜீபாட் விண்ணப்பிக்கவில்லை. ஜெர்மனியில் ஒரு குற்ற வழக்கில் அவர்சம்பந்தப்பட்டிருந்தாலும், இந்தியவிசா அவருக்குக் கிடைத்திருக்காது. எனினும், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியும். அதனால் இஸ்தான்புல் செல்லாமல், ஆம்ஸ்டர்டாம் நகருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். அதன்படி, அவரை சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.