தமிழக, கேரள எல்லையான களியக்காவிளையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி கருணாகரன் வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் இரு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தீவிர சோதனை செய்யப்பட்டு முறையாக இ பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் களியக்காவிளை சோதனை சாவடியை ஆய்வு செய்தனர்.
அப்போது, சோதனை சாவடில் இருந்த வாகனங்கள் வருகைக்கான பதிவேட்டை கருணாகரன் ஆய்வு செய்தார். மேலும் நோய் தொற்றை கண்டறியும் தெர்மாமீட்டரை பரிசோதனை செய்து பார்த்தார்.
சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை, துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார். களியக்காவிளை எல்லையை தாண்டி செல்லும் தமிழக, கேரள வாகனங்கள் இ பாஸ் இல்லாமல் இருந்தால் அனுமதிக்க வேண்டாம். கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் சோதனை சாவடியில் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்றார்.