தமிழகத்தில் ‘கரோனா’ தீவிரமாக பரவிய நேரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே முழுமையாக இயங்கின.
தனியார் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் முக்கிய சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டன.
ஆனால், அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ நோயாளிகளுக்கு மட்டுமில்லாது அனைத்து நோய்களுக்குமான சிகிச்சைகளும், மருந்து மாத்திரைகள் விநியோகமும் நடந்தன.
அதனால், ஒரு கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமானது. அது ‘கரோனா’ நோய் பரவலுக்கு வழிவகுக்கும்என்பதால் நோயாளிகளுக்கு அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களிலே சிகிச்சையும், மருந்து மாத்திரைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
அதனால், ஒட்டுமொத்த மருத்துவத்துறை மற்றும் பொதுசுகாதாரத்துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தாளுநர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஊரடங்கில் பல்வேறு சிரமங்களுக்கு 100 சதவீதம் பணிக்கு வந்தனர்.
இதில், கிராம புற ஆரம்ப சுகாதாரநிலையம், துணை சுகாதார நிலைய செவிலியர்கள், மாநகராட்சி ஆரம்ப சுகாதாரநிலையம் செவிலியர்கள் வீடு, வீடாக சென்று ‘கரோனா’ அறிகுறியிருப்பவர்களை கண்காணித்து, அவர்களை அரசு மருத்துவமனைக்கு வரவழைக்க உதவினர்.
அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ சிகிச்சைக்கு சிறப்பு சிகிச்சை வார்டுகள் உருவாக்கப்பட்டு அந்நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவக்குழுகள் உருவாக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ‘கரோனா’ அச்சத்தால் மக்கள் வெளியே வரவே அச்சப்பட்ட காலம் முதல் தற்போது வரை
இந்த தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவம், பொதுசுகாதாரம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும், அத்துறையில் பணியாற்றும் ஒப்பந்தப்பணியாளர்களும்(உள்ளாட்சி, நகராட்சி ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், காசநோய் தடுப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும்) ஒருங்கிணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசு, ‘கரோனா’ வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு மட்டும் ஒரு மாதம் சிறப்பு ஊதியம் வழங்குவதற்காக, அவர்கள் விவரங்களை அனைத்து மருத்துவமனைகளில் இருந்து கேட்டுள்ளது. அதனால்,
இந்த ‘கரோனா’ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் ‘கரோனா’ பரவலையும் பொருட்படுத்தாமல் பணிக்கு வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சியும், மன உளச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில், ‘‘கரோனா’ வார்டில் உயிரை பணயம் வைத்து பணியாற்றியவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் இந்த சிறப்பு ஊதியம் பெற முழு தகுதியானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், ‘கரோனா’ நோயாளிகளை கண்டறிந்து அவர்களை அந்த சிறப்பு வார்டுக்கு கொண்டு வரும் வரையிலான பணிகளில் மற்ற மருத்துவர்கள், சுகாதாரத்துறை செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வகப்பணியாளர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கும் பங்கு உள்ளது.
‘கரோனா’ வார்டுகளில் பணிபுரிந்தவர்களாவது,நோயாளிகளுக்கு அந்தநோய் இருப்பது தெரிந்து போதுமான பாதுகாப்பு உபகரணங்களுடன் அவர்களை அனுகினர்.
ஆனால், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணிபுரிந்த பிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், தூய்மைப்பணியாளர்கள் நோய் கண்டறிவதற்கு முன் அவர்களுக்கு‘கரோனா’ இருப்பது தெரியாமலே அனுகினர். அதனால், சிலருக்கு இந்த நோய் பாதிப்பும் வந்துள்ளது. இந்த நோய் தற்போது அறிகுறியே தெரியாமல் வருவதால் பலர் இன்னும் வந்தும் அறியாமல் பணிக்கு சென்று வந்திருக்கலாம்.
பல ‘கரோனா’ நோயாளிகள் ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு பரிசோதனை முடிவு வரும்வரை அங்கே முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர். பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தபிறகே அவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘கரோனா’ வார்டுகளுக்கு அனுபப்படுகின்றனர்.
அதனால், அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், 2 அல்லது 3 நாட்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலே குடும்பங்களை பிரிந்து தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகட்டிவ் வந்தபிறகே வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதனால், ‘கரோனா’ வார்டு பணியாளர்களை போல் அதற்கு வெளியே பணிபுரிந்த மருத்துவத்துறை, சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பிற அரசு துறை ஊழியர்கள் எல்லா சிரமங்களையும் எதிர்கொண்டுதான் தினமும் பணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த பணத்தில் அதை வாங்கி பயன்படுத்தினர். ஆனால், அதற்கான எந்த பலனும் தற்போது இல்லை.
தற்போது மற்ற அரசு துறை ஊழியர்களை போல் மருத்துவத்துறை, சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒன்றரை ஆண்ற்கான அகவிலைப்படி, ஈட்டிய விடுப்புக்குரிய ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால், ‘கரோனா’ வார்டு பணியாளர்களுக்கு மட்டுமில்லாது மற்ற மருத்துவத்துறை,சுகாதாரத்துறை மற்றும் பிற அரசு துறைகளில் இப்பணிகளில் ஈடுபட்டோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், ’’ என்றனர்.