ஓசூர் வட்டம், மத்திகிரி உள்வட்டத்தில் உள்ள கர்னூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்களும் இன்று சொந்த மாநிலத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிப்காட் - 1 மற்றும் சிப்காட் - 2 ஆகிய இரண்டு தொழிற்பேட்டைகளில் 200-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 3 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் தமிழகம் உட்பட நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். அப்படிச் செல்பவர்களில் வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் ஓசூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மிசோரம் மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிச் சென்றனர். ஓசூர் வட்டம், மத்திகிரி உள்வட்டம் கர்னூர் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் தொழிற்கூடம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 16 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்துக்கு செல்ல ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தனர். அதைத் தொடர்ந்து கர்னூர் தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் மற்றும் ஓசூர் அண்ணாநகரில் தங்கியிருந்த ஒரு மிசோரம் ஊழியர் என மொத்தம் 16 பேரும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தனியார் பேருந்து மூலமாக ஓசூரில் இருந்து இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பின்பு அங்கிருந்து ரயில் மூலமாக மிசோரம் செல்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கி ஓசூர் வட்டாட்சியர், மத்திகிரி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.