சென்னையில் பல ஆண்டுகளாக சாலையோரங்கள், தெருக்களில் கேட்பாரற்று, உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.
சென்னை: சென்னையில் பல ஆண்டுகளாக சாலையோரங்கள் மற்றும் தெருக்களில் கேட்பாரற்று, உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த 5,543 வாகனங்களை போலீஸார் கண்டெடுத்து கைப்பற்றியுள்ளனர். அவை ஏலம் விடப்பட உள்ளன.
சென்னையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கண்டறிந்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அமல்ராஜ் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் போலீஸார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, நீண்ட காலமாக சாலையோரம், தெருக்களில் கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டன. உரிமையாளர்கள் யாரும் உரிமை கோராத நிலையில், இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்காக அவை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதில் மாநகராட்சி மூலம் மதிப்பீடு செய்யப்பட்ட 1,936 வாகனங்கள் நேற்று முதல் மின்னணு ஏலத்தில் விடும் பணி தொடங்கி உள்ளது. மீதமுள்ள 3,607 வாகனங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, மின்னணு ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றுக்கான ஏல தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இதற்கிடையே, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 81 இருசக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள், 9 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 102 வாகனங்களும் ஏலம் விடப்பட உள்ளன.
இதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் உத்தரவுகள் மற்றும் வாகன மதிப்பீடுகள் பெறப்பட்டு, இணையதளம் மூலம் மின்னணு ஏலம் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.