தமிழகம்

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை ஜெயலலிதா பார்க்கவில்லை: ஸ்டாலின் சாடல்

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் பார்க்காமல், கொடநாட்டில் இருந்துகொண்டே முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறைகூறினார்.

குண்டுவெடிப்பில் காயமடைந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெறும் முன்பு அதாவது, ஏப்ரல் 8-ம் தேதியே தமிழக உளவு மற்றும் பாதுகாப்பு சிறப்பு போலீஸ் சார்பில் அனைத்துப் போலீஸ் அதிகாரிகளுக்கும் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உளவுத்துறை எச்சரித்தும் போலீஸ் கோட்டை விட்டுள்ளது கவலைக்குரியது. அதைவிட கொடநாட்டில் தங்கியிருக்கும் ஜெயலலிதா காயம்பட்டவர்களைப் பார்க்கவில்லை. அதற்குப் பதில் கொடநாட்டில் இருந்து கொண்டே அறிக்கை விடுகிறார் முதல்வர்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். எந்த விஷயத்தில் இல்லாவிட்டாலும், மத்திய, மாநில உளவுப் பிரிவுகளுக்குள் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அதிலும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

இந்தக் குண்டுவெடிப்பு குறித்து பல துப்புக் கிடைத்தும் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. இது தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ள கடமை. ஆனால், இதுவரை அவர்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை.

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி தனது பேட்டியில் தமிழகத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் தான் குண்டு வெடித்துள்ளது. தமிழக அரசும், காவல்துறை தான் அதற்கு பொறுபேற்க வேண்டும்" என்றார் ஸ்டாலின்.

SCROLL FOR NEXT