முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

விஸ்வரூபமெடுக்கும் புதுச்சேரி மது விவகாரம்: முதல்வரின் புகாரை மறுத்த போலீஸ் ஐஜி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் மது விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இவ்விஷயத்தில் போலீஸார் மீது முதல்வர் நாராயண்சாமி புகார் தெரிவிக்க, அவரது கட்டுப்பாட்டிலுள்ள போலீஸ் ஜஜியே மறுத்துள்ளார். இதையடுத்து டிஜிபியை அழைத்து முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை இடையில் 4 ஆண்டுக்கும் மேலாக மோதல் இருந்து வருகிறது. மோதல் காரணமாக அதிகாரிகளிடையே பிளவு ஏற்பட்டது. ஆளுநர் தரப்பு, அமைச்சர்கள் தரப்பு என அதிகாரிகள் இரண்டாகப் பிரிந்தனர். ஒரு கட்டத்தில் அமைச்சர்களுக்கு ஆதரவாக இருந்த உயரதிகாரிகள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு வந்த உத்தரவுகளால் தற்போது புதுச்சேரியில் இரட்டை ஆட்சியே நடப்பதாக மக்கள் நேரடியாகப் பேசத்தொடங்கினர். அதிகாரிகளும் அதே மனநிலையில் வெளிப்படையாகப் பலரும் செயல்படத் தொடங்கினர்.

ஊரடங்கு தளர்வால் கடந்த 4-ம் தேதி அனைத்துக் கடைகளையும் திறக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார். இதன்படி வியாபாரிகள் கடைகளைத் திறக்க முயன்றபோது, போலீஸார் அதனைத் தடுத்து நிறுத்தினர். தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை எனக் கூறினர். இதனால் போலீஸார், வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கடைகள் திறக்கப்பட்டன.

மத்திய அரசு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களின் குடும்பத்திற்கு தலா 5 கிலோ வீதம் 3 மாதத்திற்கு 15 கிலோ அரிசி வழங்கியது. இதனை புதுவை அரசு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய எண்ணியது. ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தலின்பேரில் அதிகாரிகள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அரிசியை ஏற்றிச்சென்று தொகுதிதோறும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் வழங்கினர்.

இதனால் அரிசி வழங்கியதில் காலதாமதம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. தற்போது பருப்பும் அதேபோல விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் துறை அமைச்சர் கந்தசாமி கூறும்போது, தன்னிடம் அதிகாரிகள் எதுவும் ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என ஆதங்கப்பட்டார்.

ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்ட சூழலில் கள்ளச்சந்தையில் மது விற்பனையானது. அதையடுத்து ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. மதுக்கடைகளில் தாசில்தார் மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றதாகக் கூறி அவரை இரவில் கைது செய்து அடித்ததாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் தாசில்தார் உட்பட அவரது குழுவில் இருந்த 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்புக் குறைவு உட்பட பல காரணங்களால் 90 மதுக்கடைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்தானது. இச்சூழலில் விசாரணைக் குழுவை முதல்வர் கலைத்தார். அதையடுத்து கிரண்பேடி இவ்வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளதாகவும் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி, "காவல்துறையினர் ஆளுநர் பேச்சைக் கேட்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பேச்சைக் கேட்காமல் ஆளுநரின் ஊதுகுழலாகச் செயல்படுகின்றனர். சிபிஐ மூலம் அரசுக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. பொய் வழக்குப் போடுகிறார்கள்" என கடுமையாக விமர்சித்தார்.

தனது கட்டுப்பாட்டிலுள்ள துறையான போலீஸிலுள்ள அதிகாரிகளே தனது பேச்சைக் கேட்பதில்லை என, முதல்வர் நாராயணசாமி வெளிப்படையாக தெரிவித்த சூழலில் வழக்கமாக பதில் ஏதும் தரும் வழக்கமில்லாத காவல்துறையும் தனது மவுனத்தைக் கலைத்துள்ளது.

புதுச்சேரி ஐஜி சுரேந்தர்சிங் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், "ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற கள்ள மது விற்பனை விவகாரத்தில் காவல்துறை சரியான நடவடிக்கையே எடுத்துள்ளது. எங்கேயும் விதிமீறல்களில் காவல்துறை ஈடுபடவில்லை.

சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே காவல்துறை செயல்பட்டுள்ளது. மொத்தம் 242 வழக்குகள் பதிவாகின. கலால் விதிப்படியே உரிமம் ரத்தாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டோர் மறுக்க நினைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது நிருபிக்கலாம். பொய் வழக்குப் போடுகிறோம் என்பதை உறுதியாக மறுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் குற்றச்சாட்டுக்கு அவரது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய துறையே பதிலளித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸாவை அழைத்து முதல்வர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவையில் நெடுநேரம் உரையாடியதன் மூலம் இவ்விவகாரம் மேலும் விஸ்வரூபமெடுக்கும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT