எரித்து கொலை செய்யப்பட்டபத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்தாருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயபால். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி ஜெயபால் தரப்பை முருகன் தாக்கி வந்துள்ளார்.
சமீபத்தில் ஜெயபாலின் மகனை முருகன் தரப்பு தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மறுநாள் ஜெயபால் வீட்டில் இல்லாத நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகளை முன்னாள் முருகன், கலியபெருமாள் இருவர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து புகை வெளியே வந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முருகன், கலியபெருமாள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடூரமாக கொலை செய்யப்பட்ட விழுப்புரம் சிறுமியின் வீட்டிற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் கிராமத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட 15 வயது வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ வீட்டிற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவி ஜெயஸ்ரீ உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தாருக்கும் எல்.முருகன் ஆறுதல் கூறினார். பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகளும் மறைந்த மாணவியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்