பழக்கடைகளை சூறையாடி ஏழை பழக்கடை வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டத்தை அமல்படுத்தும் நிலையில் உள்ள அதிகாரிகள் சாமானிய மக்களிடம் அதை பிரயோகிக்கும்போது அனைத்து அம்சங்களையும் யோசித்து பிரயோகிக்க வேண்டும், குற்றம் நடைபெறாமல் தடுப்பதே முதல்பணி, குற்றத்துக்கு தண்டனையும் திருத்துவதற்கான செயலே, குற்றத்தின் தன்மையை வைத்தே தண்டனையையும் தீர்மானிக்க வேண்டும் என்பது அதிகாரிகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் சொல்லப்படும் முன் ஆலோசனை.
சமூக வலைதளங்களில் நேற்று வெளியான காணொலி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் வாணியம்பாடி உழவர்சந்தை அருகில் உள்ள சி.எல்.சாலை பகுதியில் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நடந்துக்கொண்ட விதம் அந்தக்காணொலியில் பதிவாகியிருந்தது.
சாதாரண விளிம்பு நிலையில் உள்ள மார்க்கெட் பழ வியாபாரிகள் பழத்தை தட்டி விடுவது, சாலையில் வீசி எரிவதும், பழக்கடை தள்ளுவண்டியை பழத்தோடு சாலையில் சாய்த்ததும், பழங்களை அள்ளி சாலையில் வீசுவதும் சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வில்லன்கள் செய்வது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கியது.
அதிகாரி என்பதால் நஷ்டத்தை சகித்துக்கொண்டு உள்ளூர வெம்பியபடி சாலையில் கொட்டிக்கிடக்கும் பழங்களை அள்ளும் பெண் வியாபாரியை அலட்சியமாக பார்த்தப்படி அந்த அதிகாரி வீர நடை போட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
காணொலியை பார்த்தோர் நெஞ்சம் கொதித்து முதல்வரின் ட்விட்டர் அக்கவுண்டுக்கு டேக் செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
கனிமொழி ட்விட்டர் பதிவு:
“வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”.
உடனடியாக இதுகுறித்த தகவலறிந்த மேலதிகாரிகள் நகராட்சி ஆணையரை கண்டித்து போய் வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து சாலைவையுடன் வட்டாட்சியர், டிஎஸ்பி சகிதமாக சென்று அனைத்து வியாபாரிகளிடமும் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் நகராட்சி ஆணையர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (suo-moto)வழக்குப்பதிவு செய்துள்ளது. அது குறித்து மாநில நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ள நோட்டிஸில் மனித உரிமை ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உரிய விளக்கத்தை 2 வார காலத்துக்குள் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மனித உரிமை ஆணைய நோட்டீஸ் விபரம்:
“ வாணியம்பாடி மார்க்கெட்டில் நடந்த விபரங்கள் குறித்த செய்தியினை தொலைக்காட்சி செய்திகள் வாயிலாக அறிந்தோம்.
* வாணியம்பாடி சந்தையில் பழ வியாபாரிகள் விதியை மீறி கடைகளை வைத்திருந்தால் அதன் மீது சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அங்குள்ள பொருட்களை அழித்துள்ளார்.
* இது அங்குள்ள ஏழை பழ வியாபாரிகளுக்கு எதிராக நகராட்சி நிர்வாக ஆணையர் எடுத்த மனித உரிமை மீறல் நடவடிக்கை ஆகும்.
*இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை குறித்து 2 வார காலத்திற்குள் மாநில நகராட்சி நிர்வாக ஆணையரும், வாணியம்பாடி ஆணையரும் அறிக்கை அளிக்க வேண்டும்.
* 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்ப தவறும்பட்சத்தில் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.