ஊரடங்கு தளர்வை மீறி தென்காசியில் திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நான்கு மாடிகளைக் கொண்ட ஜவுளிக்கடை ஊரடங்கு விதிமுறைகளை மீறி இன்று திறக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி நகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்குச் சென்று சோதனையிட்டனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்ததோடு, முழு அளவில் ஊழியர்களை வரவழைத்து கடையை செயல்படுத்தியதும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்ததும், வாடிக்கையாளர்களுக்கு கை கழுவ தண்ணீர், சோப் வைக்காமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, கடையை பூட்டி சீல் வைத்தனர்.
விதிகளை மீறி கடைகளை திறந்தாலும், அனுமதிக்கப்பட்ட கடைகளில் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.