நெய்வேலியில் என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற என்எல்சி தொழிலாளர் களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
என்எல்சியில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள், ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல் படுத்தக்கோரி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வரு கின்றனர். நேற்றுடன் 18-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர் கிறது. இதுவரை, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், என்எல்சி தொழி லாளர்கள் கடந்த 2 நாட்க ளாக சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதை யடுத்து, நேற்று காலை நெய்வேலியில் உள்ள பெரியார் சதுக்கத்தில் இருந்து என்எல்சி தொழிலாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்று கையிட முயன்றனர். போலீஸார் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 2700 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். எனினும், அங்கேயே உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நெய்வேலியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.