தமிழகம்

மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 16-ம் தேதி புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து 16-ம் தேதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று கூறியதாவது:

''தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வரும் 15 ஆம் தேதியும் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16 ஆம் தேதி புயலாகவும் மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும்.

வரும் 15-ம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், 16-ம் தேதி 55- 65 கி.மீ.வேகத்திலும் , 17-ம் தேதி 65-75 கி.மீ. வேகத்திலும் அவ்வப்போது 85 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் காற்றின் வேகம் அதனைத் தொடர்ந்து வலுப்பெறக்கூடும். மீனவர்கள் இக்காலகட்டங்களில் மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடந்த 24 மணி நேரத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 10 செ.மீ. மழையும், காரைக்கால் மற்றும் தஞ்சாவூரில் 5 செ.மீ. மழையும், திருவிடைமருதூர், கும்பகோணம், ராமேஸ்வரம், சித்தார் பகுதிகளில் நான்கு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலையாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும்.

தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளான குமரிக்கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்''.

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT