தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புவோருக்கு மருத்துவர்கள் சான்றிதழை வழங்குகின்றனர். 
தமிழகம்

தஞ்சாவூரில் கரோனா பாதிப்பிலிருந்து 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூரில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், நெய்வாசல், அம்மாப்பேட்டை, மேலத்திருப்பூந்துருத்தி, வல்லம், கபிஸ்தலம், பாபநாசம், கும்பகோணம், தஞ்சாவூர் சுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து பாபநாசம், கும்பகோணம் பகுதிக்கு வந்தவர்களுக்கும் என மொத்தம் 74 பேருக்கு கரோனா தொற்று பரவியது.

பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஏப்.16-ம் தேதியிலிருந்து குணமடைந்து வெவ்வேறு தினங்களில் 47 பேர் வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று (மே 13) காலை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இருவர், கும்பகோணம், மேலத்திருப்பூந்துருத்தி, நெய்வாசல் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 53 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 21 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து, இன்று குணமடைந்து வீடு திரும்பியவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ச.மருததுரை, முன்னாள் முதல்வர் குமுதா லிங்கராஜ் மற்றும் மருத்துவர்கள் பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழ்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

மேலும், குணமடைந்து வீடு செல்லும் நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 10 ஆயிரத்து 28 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 9,299 நபர்களுக்கு அறிகுறி இல்லை எனத் தெரியவந்துள்ளது. 660 நபர்களுக்குப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

SCROLL FOR NEXT