முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (மே 13) வெளியிட்ட அறிக்கையில், "சமூக நீதிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது.
நீட் நுழைவுத் தேர்வைத் திணித்து, மருத்துவக் கல்வி என்பது ஏழை, எளிய, கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் கனவிலும் எட்டாக் கனியாக ஆக்கிவிட்டது. இதே நிலைமைதான் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளிலும் நிலவுகிறது.
மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும் மருத்துவப் மேற்படிப்புக்கான இடங்கள் 1,758 இருக்கின்றன. இதில் 50 விழுக்காடு இடங்கள், அதாவது 879 இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்குத் தரப்படுகிறது.
இவ்வாறு மற்ற மாநிலங்களிலிருந்தும் அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் இடங்களை நிரப்பும்போது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தர முடியாது என்று மத்திய பாஜக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக விடாப்பிடியாக மறுத்து வருகிறது.
இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 19 ஆயிரத்து 100 மருத்துவ மேற்படிப்புகளில், 50 விழுக்காடு, அதாவது 9,550 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோன்று, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,352 இல் 50 விழுக்காடு என 676 இடங்கள் மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் 9,550 முதுநிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருகு 27 விழுக்காடாக 2,578 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 371 இடங்களையே ஒதுக்கீடு செய்துள்ளது.
இது மொத்தம் உள்ள இடங்களில் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பு ஏழைகள் என்று பாஜக அரசு புதிதாக உருவாக்கி உள்ள பிரிவினருக்கு 635 இடங்கள் அள்ளி வழங்கி இருக்கிறது.
அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு உரிமை பெற்று இருக்கின்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டியதை மத்திய பாஜக அரசு தட்டிப் பறித்து, சமூக நீதியை சவக்குழியில் தள்ளி வருகிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 2017 -2018 இல் 3,101 இடங்கள் பறிக்கப்பட்டன. 2018 -19 இல் 2,429 இடங்களும், 2019 -20 இல் 2,207 இடங்களும் மத்திய பாஜக அரசால் பறிக்கப்பட்டு இருக்கின்றன.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 7,737 இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இழந்து இருக்கின்றனர்.
சமூக நீதிக்கு எதிரான பாஜக அரசின் இத்தகைய போக்குகள் வன்மையான கண்டனத்திற்கு உரியது. பிற்படுத்தப்பட்டோரின் சட்டப்பூர்வமான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உறுதி செய்ய வேண்டும்" என, வைகோ வலியுறுத்தியுள்ளார்.