முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சையை சேர்க்க வேண்டும் என்று ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இதய அறிவியல் பிரிவு தலைவர் கே. ஆர். பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் புதிய பிரிவாக இறுதிநிலை இதயச் செயலிழப்பு மற்றும் இதய மாற்றுப்பதியத் திற்கான சிகிச்சை மையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் புதிய மையத்தைத் திறந்து வைத்து ஃபோர்டிஸ் மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் ஆதித்ய விஜ் பேசியதாவது:
மருத்துவத் துறையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக இதய மாற்று கருவிகள் நோயாளிகளுக்குப் பாதுகாப்பானதாக அமைந்துள்ளது. தற்போது முதன் முறையாக ஃபோர்டிஸ் மருத்துவமனை சார்பாக துவங்கப்பட்டுள்ள புதிய இதய மாற்றுப்பதியத்திற்கான சிகிச்சை மையம் நாட்டின் நேர்த்தியான மையங்களில் ஒன்றாக இடம்பிடித்து இருக்கிறது.
இதனால் இதய மாற்று அறுவை சிகிச்சைகாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இதய அறிவியல் பிரிவு தலைவர் கே.ஆர். பாலகிருஷ்ணன் பேசுகையில், “ இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 5 ஆயிரம் இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. சென்னையில் இதய தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் செய்ய வேண்டிய தொடர் சிகிச்சைக்கான மருந்துகளுக்குத் தான் அதிகச் செலவு ஆகிறது.
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இருக்கிறது. அதேபோல் இதய மாற்று அறுவை சிகிச்சையி னையும் இணைக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் இதய நோய் பாதித்த 700 குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவி செய்த ஐஸ்வர்யா அறக்கட்டளையின் தலைவர் சித்ரா விஸ்வநாதனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
புதிய மையத்தின் இணைய தளமும் தொடங்கப்பட்டது.