பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும், தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து திரும்ப வீட்டிற்கு கொண்டு சென்று விட பேருந்து வசதிகள் செய்யப்படவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு தேர்வுகள் குறித்த அறிவிப்பினைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் சில கருத்துகளை கூறி உள்ளார். அதில், 31-ம் தேதி வரை விமானம், ரயில் போக்குவரத்து ரத்து செய்ய பிரதமரிடம் தமிழக முததல்வர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு எப்படி வரமுடியும் என்று கேட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும், தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து திரும்ப வீட்டிற்கு கொண்டு சென்று விட பேருந்து வசதிகள் செய்யப்படவுள்ளது. மலைப் பகுதியில் உள்ள மாணவர்களையும், தேர்வு அறைக்கு அழைத்து வர பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு அறையில் மருத்துவத்துறை அறிவுரையின்படி, மாணவர்களுக்கு இடையே போதிய இடைவெளி விடப்படும். அதே போன்று தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். இதனால், நோய்தொற்று பரவும் என அச்சப்படத் தேவை இல்லை.
சில மாநிலங்களில் தேர்வு நடத்தப்பட்டும், விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெறுகிறது.
மேலும், இரண்டு ஆண்டுகளில் 1115 புதிய தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு அருகாமை யிலேயே தேர்வு மையங்கள் அமையும். பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தபோது, கடைசித் தேர்வு நாளன்று போக்குவரத்து தடை உள்ளிட்ட காரணங்களால் சிலர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் நலனுக்காக, 36 ஆயிரத்து 842 மாணவர்கள் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, என்றார்.