கிருஷ்ணகிரியில் ராணுவ கேன்டீனில் பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த முன்னாள் ராணுவ வீரர்கள். 
தமிழகம்

சமூக இடைவெளியின்றி முன்னாள் படைவீரர்கள் குவிந்ததால் கிருஷ்ணகிரியில் ராணுவ கேன்டீனை மூட உத்தரவு

செய்திப்பிரிவு

பொருட்கள் வாங்குவதற்கு டோக்கன் பெறுவதற்காக சமூக இடைவெளியின்றி முன்னாள் படைவீரர்கள் குவிந்ததால் கிருஷ்ணகிரியில் ராணுவ கேன்டீனை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், சார்ந்தோர் களுக்கு, ராணுவ கேன்டீன் மூலம் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள், கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள ராணுவ கேன்டீனில் தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை பெற்று வருகின்றனர்.

150 பேருக்கு டோக்கன்

இந்நிலையில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி மூடப்பட்ட கேன்டீன், கடந்த 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாள் ஒன்றுக்கு 150 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்குவது எனவும், மது வகைகள் விற்பனை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், கேன்டீனில் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன், கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனிடையே டோக்கன் பெறுவதற்காக, திருமண மண்டபத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதலே முன்னாள் படை வீரர்கள் குவியத்தொடங்கினர்.

2000 பேர் குவிந்தனர்

காலை 6 மணியளவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். டோக்கன் பெறவந்தவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் நின்றிருந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபாகருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ராணுவ கேன்டீனை வரும் 31-ம் தேதி வரை மூட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT