புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பாதிப்பில் அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் அதிகளவில் கரோனா தொற்று தென்படுகிறது. எனவே, புதுச்சேரி மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். குறிப்பாக மத்திய அரசின் அறிவுரைகளை முறையாக கேட்டு நடவடிக்கை எடுக்கிறோம். கரோனாவுடன் நாம் வாழ வேண்டும் என்று கூறுகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதையெல்லாம் உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டும்.
பிரதமருடன் காணொலிக் காட்சியில் பேசும்போது, புதுச்சேரியின் நிதிநிலை குறித்து கூறினேன். மதுக்கடைகளை தவிர தொழில் நிறுவனங்கள், தொழிற் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.25 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். ஆகவே, சுற்றுலாவை மேற்படுத்த திட்டம் வேண்டும் என்று தெரிவித்தேன். 4-வது முறையும் ஊர டங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் நிறைய தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று கூறினேன். பிரதமர் பேசியதிலிருந்து, மே 17-ம் தேதிக்குப் பிறகு ஊடரங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது என்றார்.