தமிழகம்

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விசாரணை தாமதம்: சிலை திருட்டு வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி

கி.மகாராஜன்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் குற்ற வழக்கின் விசாரணையை முடிக்காததைக் காரணமாக கூறி சிலை திருட்டு வழக்கில் ஜாமீன் கோரியவரின் மனுவை, குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரணை முடியாததற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தான் காரணம் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்டம் சமையநல்லூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள எஸ்.காசி, ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குற்ற வழக்கின் விசாரணையை வழக்கின் தன்மையை பொருத்து 60 அல்லது 90 நாளில் முடிக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட நாளில் விசாரணையை முடிக்காவிட்டால் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நான் 92 நாளாக சிறையில் உள்ளேன். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போலீஸார் விசாரணையை முடிக்கவில்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் காசி கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வீடியோ கான்பரன்ஸில் விசாரித்தார். அரசு தரப்பில் சிலை திருட்டு வழக்கில் மனுதாரர் உட்பட 7 பேருக்கு தொடர்புள்ளது. இதில் மனுதாரர் உட்பட 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேர் தலைமைறைவாக உள்ளனர். 3 சிலைகள் திருடப்பட்டதில் ஒரு சிலை மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மனுதாரர் மீது பல வழக்குகள் உள்ளன.

ஊரடங்கால் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறுவது உள்ளிட்ட விசாரணையை தொடர முடியாமல் விசாரணை அதிகாரியின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் விசாரணை உரிய காலகெடுவிற்குள் முடிக்க முடியவில்லை. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விசாரணையை தொடர்வதில் பல்வேறு தடைகள் உள்ளன. இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணை முடியாதது போலீஸாரின் தவறல்ல.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் குற்ற வழக்குகளின் விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கவில்லை என்பதை காரணமாக வைத்து மனுதாரர் ஜாமீன் கேட்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT