பொதுமுடக்கம் தொடர்ந்தாலும் பெரும்பான்மையான கடைகளைத் திறக்க அனுமதித்து விட்டது தமிழக அரசு. சலூன்கள், அழகு நிலையங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் பெரும்பாலும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், தொழில் முடக்கம் ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்துவருகின்றனர் முடிதிருத்தும் தொழிலாளர்கள்.
முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசியல் கட்சியினர் பலரும் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தென்மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி தங்கள் பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் மனுகொடுத்து வருகின்றனர்.
அந்த விதத்தில், கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏவான ஆஸ்டினிடம் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட உடலுழைப்பு மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் அதன் செயலாளர் கணேசன் தலைமையில் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ''கடந்த மார்ச் மாதம் முதல் முடிதிருத்தும் கடைகள் அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மூடப்பட்டுவிட்டதால் உணவுக்கே திண்டாடும் நிலையில் நாங்கள் இருக்கிறோம். எனவே, சலூன்களை காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை திறந்து தொழில் செய்யவும், எங்கள் வறுமையைப் போக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கு முடிவெட்டும்போதும் முகக்கவசமும், கையுறையும் அணிவோம். தேவையின்றி பேசுவதைத் தவிர்ப்போம். ஷேவிங் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிளேடுகள் உபயோகிக்கவும், ஒருவருக்குப் பயன்படுத்திய பிறகு கத்திரி உள்ளிட்ட முடிதிருத்தும் கருவிகளைக் கட்டாயம் சோப்புத் தண்ணீரில் கழுவுவதுடன் எங்கள் கைகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்வோம். சலூன்களில் தனிமனித இடைவெளியை நிச்சயம் கடைப் பிடிப்போம்'' என்று கூறப்பட்டுள்ளது.