எங்கள் வேலை எழுதுவதோடு முடிவதல்ல, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தாளர்களில் ஒருவர் அ.முத்துகிருஷ்ணன். மதுரை யானைமலையை உடைப்பதற்கென்றே அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக 'பசுமை நடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பணியைத் தடுத்து நிறுத்தியவர்.
வாரந்தோறும் 'பசுமை நடை' எனும் பெயரில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியையும் செவ்வனே செய்து வருபவர். இந்த பொதுமுடக்கக் காலத்தில் அடித்தட்டு மக்கள் படும் பாட்டைப் பார்த்து, கரோனா நிவாரணப் பணியிலும் பசுமை நடை அமைப்பைக் களமிறக்கினார் அ.முத்துகிருஷ்ணன்.
அகதிகள், குப்பை பொறுக்குபவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள், சாட்டையடிப்பவர்கள், குறி சொல்பவர்கள், திருநங்கைகள், தூய்மைப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மதுரை புதுமண்டபத்திலிருக்கும் தையல் கலைஞர்கள், வெளிமாநிலங்களில் இருந்துவந்து தமிழகத்தில் தங்கி விளக்குமாறு செய்து விற்பவர்கள் என்று தேடித்தேடிச் சென்று உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் பசுமை நடைக் குழுவினர். இதுவரையில் சுமார் 1,500 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எப்படியிருக்கிறது இந்த அனுபவம் என்று அ.முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது, "ஆரம்பத்தில் பசுமை நடைக் குழுவினரின் உதவியை மட்டும் வைத்து இந்த நிவாரணப் பணிகளைத் தொடங்கினோம். அடுத்து நட்பு வட்டத்தில் இருப்போர், தெரிந்தோரையும் இப்பணியில் ஈடுபடுத்தும் வகையில், பசியால் வாடும் குடும்பங்களுக்கு பலசரக்குத் தொகுப்புகளைப் பரிசளியுங்கள் என்ற திட்டத்தை அறிவித்தோம். அதன்படி மேலும் சிலர் நிதி உதவி வழங்கினார்கள்.
10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட 14 பொருட்களைக் கொண்ட இந்த பலசரக்குத் தொகுப்பு 4 பேர் கொண்ட குடும்பத்தின் 15 முதல் 20 நாள் தேவையைத்தான் பூர்த்தி செய்யும். இந்த கரோனா பலரது சுயமரியாதையைக் கடுமையாக அசைத்திருக்கிறது. நாங்கள் நிவாரணம் வழங்கும் இடங்களில்கூட பலர் தலையைக் குனிந்தபடி நிற்கிறார்கள். உதவி செய்யுங்கள் என்று கேட்கவே தயங்குகிறார்கள்.
இன்னொருபுறம் பணக்காரர்களின் இறுகிப்போன மனதையும் பார்க்கிறோம். சொந்தமாக வீடு, இரண்டு மூன்று கார்களை வைத்திருப்பவர்கள்கூட, வெறுமனே 1000, 2000 ரூபாய் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். தங்கள் கண் முன்னேயே பசியால் யாராவது இறந்தால்கூட, நம் கையிருப்பு கரைந்துவிடக்கூடாது, என் சொத்து பத்திரமாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை வசதி படைத்த பலரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இதை எல்லாம் தாண்டித்தான் வேலை செய்கிறோம். மதுரையைப் போல சென்னையில் இருக்கும் ஏழைகளுக்கும் உதவ முடியுமா என்று கோரிக்கை வந்தது. உடனே, தலித் முரசு இதழின் மூலம் அங்கே உதவி தேவைப்படுகிற மக்களை ஒருங்கிணைத்தோம். ஓட்டேரி, கோடம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், டிரஸ்ட்புரம், நுங்கம்பாக்கம், அயனாவரம், முகப்பேர், நொலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க ஏற்பாடு செய்தோம். தோழர்கள் ராஜாமணி, தமிழேந்தி, சென்னம்மாள் உள்ளிட்டோர் இந்தப் பணியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்" என்றார் முத்துகிருஷ்ணன்.