‘‘பொருளாதாரத்தை தமிழக அரசு பூஜ்ஜியமாக்கிவிட்டது,’’ என கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுக்கடைகளை திறந்த பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது போன்ற மோசமான சம்பவங்கள் அதிகளவில் நடக்கும்.
குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் பத்தாம் வகுப்பு தேர்வை அரசு அறிவித்துள்ளது. இந்த அரசை பொறுத்தவரை காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்.
கரோனா தொற்றை தடுக்க முடியாமல் அரசு தடுமாறுகிறது. அவர்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. கரோனா பரிசோதனையை முறையாக மேற்கொள்ளாமல் மக்களை மிகப் பெரிய அளவில் ஏமாற்றி வருகின்றனர். பொருளாதாரத்தை பூஜ்ஜியமாக மாற்றி விட்டனர், என்று கூறினார்.
கார்த்தி சிதம்பரம் எம்பி கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தத் தேவையில்லை. அரையாண்டுத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்கலாம். என்னை பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை தவிர எந்த தேர்வும் நடத்தத் தேவையில்லை.
இக்காலக் கட்டத்தில் இந்தியாவில் எந்தவொரு புரட்சிகரமான திட்டங்களையும் அரசு அறிவிக்கவில்லை.
மனிதநேயம் இல்லாமல் அரசு செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி வருகிறோம். வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது ஊர்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும்.
ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதிக்கு தனி வங்கிக் கணக்கு உள்ளநிலையில், தற்போது பிரதமர் பெயரில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளனர். அதில் வந்த நிதியை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை, என்று கூறினார்.