தமிழகம்

மே 14, 16 ஆகிய இரு நாட்களுக்கு மட்டுமே ரயில் சேவை; கரோனா முடியும் வரை ரயில்களை இயக்க வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் 

செய்திப்பிரிவு

ரயில் சேவையை கரோனா தொற்று நீங்கும் வரை இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தற்போது 2 நாட்களுக்கு மட்டுமே ரயில் சேவைக்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

“மத்திய ரயில்வே துறை, புதுடெல்லி – சென்னை மற்றும் சென்னை – புதுடெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் மே 13-ல் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலிக் காட்சியின்போது, முதல்வர் மே 31 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளைத் தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், ஏற்கெனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் மே 14 மற்றும் 16 தேதிகளில் ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு ரயில்கள் தவிர இதர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்தானி ரயிலில் உள்ள அனைத்துப் பெட்டிகளும் குளிர் சாதன வசதி உள்ளதாகவும், ராஜ்தானி ரயிலில் சுமார் 1100 பயணிகள் வரை பயணம் செய்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர் சாதன வசதி கொண்ட இந்த ரயில்கள் மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் RT-PCR பரிசோதனை செய்துதான் தமிழ்நாட்டிற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தினாலும், 1000க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொள்ளப்பட்டது.

அதனால் இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும், அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளைப் பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும், தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், சென்னையில் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT