தமிழகம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1197 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் பிஹார் பயணம்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 1197 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் இன்று இரவு பிகார் புறப்பட்டு செல்கிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் 4,500 பேர் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என கடந்த சிலநாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முதல் கட்டமாக பிஹார் மாநிலத்தை சேர்ந்த 1140 தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் இன்று இரவு புறப்பட்டு செல்கிறார்கள்.

இவர்களில் 901 பேர் கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணியிலும், 296 பேர் தூத்துக்குடி துறைமுக பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் ஆவர்.

இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து இடைவெளியில் நிற்காமல் பாட்னா சென்றடைகிறது. லோகோ பைலட் மாற்றுவதற்காக ஈரோடு, ரேணிகுண்டா, விஜயவாடா ஆகிய இடங்களில் சிறிது நேரம் இந்த ரயில் நின்று செல்கிறது.

இத்தொழிலாளர்களின் பயணச்செலவு, உணவு ,குடிநீர், மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அளிக்கின்றன. முன்னதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் 901 வடமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 3500 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த 1200 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் அடுத்தடுத்து சிறப்பு ரயில்கள் இன்னும் ஓரிரு நாட்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT