தமிழகம்

குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு: வெளியூர்களில் இருந்து வருவோர் மூலம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்றால் மக்கள் அச்சம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. வெளியூர்களில் இருந்து வருவோர் மூலம் தினமும் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப்பணியாளர்கள் மூலமும், ஆரல்வாய்மொழி சோதனை சாவடி சுகாதார பணியாளர்கள் மூலமும் இதுவரை 6306 பேருக்கு கரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நோய் தொற்று ஏற்பட்டதால் கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்த தேங்காய்பட்டணம் தோப்பு பகுதியில் குணமடைந்த நோயாளிகளுக்கு 14 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதனால் தேங்காய்பட்டணம் தோப்பு பகுதி நேற்று முதல் கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுவரை 300 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளியூர்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தினமும் வரும் நூற்றுக்கு மேற்பட்டோரால் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் ஆரல்வாய்மொழி சோதனை சாவடி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே தஞ்சையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த நீதிமன்ற பெண் ஊழியர், சென்னைக்கு சென்று திரும்பிய வழக்கறிஞர், பெங்களூருவில் இருந்து வந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த பெண் என 3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் குமரியில் கரோனா தொற்று எண்ணிக்கை 28 பேராக அதிகரித்தது. தற்போது ஆசாரிபள்ளத்தில் மட்டும் 9 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருவோரால் கரோனா தொறறு அதிகரித்திருப்பதால் குமரி மாவட்டத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT