தூத்துக்குடியில் இருந்து பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் 296 பேர் தீவிர பரிசோதனைக்குப் பிறகு இன்று மாலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்..
பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தென்மாவட்டங்களில் சிக்கியுள்ள பிஹார் மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திரும்ப திருநெல்வேலியில் இருந்து இன்று மாலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் தூத்துக்குடியில் இருந்து 296 பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றனர். தூத்துக்குடி துறைமுக பகுதியில் நடைபெறும் அனல்மின் நிலைய கட்டுமாப்ன பணிகளில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கால் வேலை இழந்து தவித்த இவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்த 296 பிஹார் மாநிலத் தொழிலாளர்களை முதல் கட்டமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவருக்கும் இன்று காலை முதல் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ளனவா என மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இதபோல் காவல் துறை அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் மாலையில் 10 அரசு பேருந்துகள் மூலம் மாலையில் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கிருந்து சிறப்பு ரயிலில் சொந்த ஊர் செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் பிஹார் மாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்கின்றனர்.