தமிழகத்தில் இருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான உதவிகளை செய்ய பாஜகவில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் வெளி மாநில தொழிலாளர்களால் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியவில்லை.
தற்போது ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு வெளி மாநிலத் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களை கணக்கெடுத்து, அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான உதவிகளை செய்வதற்காக தமிழக பாஜகவில் மாநில செயலர் கரு.நாகராஜன் தலைமையில் 9 பேர் குழுவை அமைத்து மாநில தலைவர் எல்.முருகன் அமைத்துள்ளார்.
இந்தக்குழுவில் வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கோ.வெங்கடேசன், சேலம் நகர் முன்னாள் தலைவர் ஆர்.பி.கோபிநாத், திருப்பூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.சின்னசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.கல்யாணசுந்தரம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம்.நாகராஜ், திருச்சி கோட்ட பொறுப்பாளர் எம்.சிவசுப்பிரமணியன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீ்ந்திரன், நெல்லை மாவட்ட தலைவர் ஏ.மகாராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக்குழு தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் போது தமிழகத்தில் உணவு, மருத்துவம், தங்குமிடம் வசதியை செய்து கொடுக்கும்.
இந்தக்குழுவுக்கு கட்சியின் அனைத்துத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.