ஆட்சியரிடம் மனு அளிக்கும் செந்தில்பாலாஜி. 
தமிழகம்

ஆய்வுக்கூட்டங்களுக்கு அழைக்காவிடில் ஆட்சியரை எதிர்த்துப் போராட்டம்; கரூர் மாவட்ட ஆட்சியருக்கு செந்தில்பாலாஜி எச்சரிக்கை

க.ராதாகிருஷ்ணன்

ஆய்வுக்கூட்டங்களுக்கு அழைக்காவிடில் ஆட்சியரை எதிர்த்துப் போராட்டம் நடைபெறும் என, கரூர் மாவட்ட ஆட்சியருக்கு திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனிடம் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி இன்று (மே 12) மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் செந்தில்பாலாஜி கூறுகையில், "திமுகவின் சென்னை உதவி அழைப்பு மூலம் உதவி கோரிய 24 ஆயிரத்து 673 பேர் உள்ளிட்ட 1 லட்சத்து 64 ஆயிரத்து 829 பேருக்கு கரூர் மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து மக்கள் எங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். அவற்றில் உதவி தேவைப்படுபவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளோம். 2 லட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளேன். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்கள் குறித்து அரவக்குறிச்சி எம்எல்ஏவான எனக்கோ, குளித்தலை எம்எல்ஏ ராமருக்கோ, கரூர் எம்.பி.க்கோ தகவல் தெரிவிப்பதில்லை.

ஆனால், அமைச்சர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டால், எனக்குத் தெரியாது என்கிறார். அவர்கள் தகவல் தெரிந்து பங்கேற்றுள்ளனர். உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.

பக்குவமற்ற பதிலை மாவட்ட ஆட்சியர் தருகிறார். ஆட்சியரை எதிர்த்துப் போராட்டம் நடைபெறும்" என்றார்.

SCROLL FOR NEXT