விழுப்புரம் அருகே எரித்துக் கொல்லப்பட்ட பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு திமுக, விசிக ஆகிய கட்சிகள் நிதியுதவி செய்தன.
விழுப்புரம் அருகே உள்ள சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று முன்தினம் பக்கத்து ஊருக்குச் சென்றிருந்த நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில், நேற்று (மே 11) உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் மாணவி வலியால் அலறியுள்ளார். உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60) ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, முருகன், கலியபெருமாள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று மாலை திருக்கோவிலூர் எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் பொன்முடி மாணவியின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் முதல்கட்ட நிதியாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இரண்டு வருடங்களுக்கு முன்பே இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. இதைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் குற்றச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.
தற்போது ஒரு 15 வயது மாணவியின் உயிரைப் பறிக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு மிக அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும்" என்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவியின் குடும்பத்தாருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.