விழுப்புரம் சிறுமியை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் ஆளும்கட்சி என்பதால் அவர்களைக் காப்பாற்ற ஆளுங்கட்சித் தரப்பில் தலையிட்டால் அதிகாரிகள் இணங்கி விடக்கூடாது.என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றனர்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்பாகவே தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஏசகன், முருகன் இருவரையும் கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது அதிமுக. இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பதிவில் திருமாவளவன் கூறியிருப்பதாவது:
"சிறுமியைப் படுகொலை செய்த கொடியவர்களை #ஜாமீனில் விடுவிக்க காவல்துறை துணைபோய் விடக்கூடாது. உடனே விசாரித்து விரைந்து தண்டிக்க வேண்டும். குற்றவாளிகள் ஆளுங்கட்சி என்பதால் அவர்களைக் காப்பாற்ற ஆளுங்கட்சித் தரப்பில் தலையிட்டால் அதிகாரிகள் இணங்கி விடக்கூடாது.
சிறுமி குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி! பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் அரசுக்கு ஏன் இந்த சிரமம்? கரோனா நெருக்கடியிலிருந்து அரசு மீண்டபிறகு சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லலாம். முடிந்தால் அப்போது நிதியுதவி செய்யலாம்.
பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறை நாடு, மொழி, இனம், மதம், சாதி போன்ற அனைத்து வரம்புகளையும் கடந்து காலம் காலமாக நடந்தேறும் ஒரு 'உலகளாவியக் கொடூரம்'. அது ஆண்கள் என்னும் உளவியல் கட்டமைத்துள்ள ஆதிக்க வெறியின் வெளிப்பாடாகும். இது மானுடத்தின் பேரிழிவு"
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக இன்று (மே 12) காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாணவியின் குடும்பத்துக்கு வீடியோ கால் மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் திருமாவளவன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"சிறுமியின் பெற்றோரை வீடியோ அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அத்துடன், கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் நிதியளிக்கப்பட்டது. அதனைக் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் எம்.பி. நேரில் வழங்கினார். பெற்றோரின் கதறல் நெஞ்சை உலுக்கியது".
இவ்வாறு திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.