நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மொளசி, இறைமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாழை பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஏறத்தாழ 250 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலை தடுக்க கடந்த 45 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் ஊரடங்கால், வாழைத்தார்களை வாங்க பெரும்பாலான வியாபாரிகள் வருவதில்லை.
அதேபோல, வாழை அறுவடை செய்ய கூலியாட்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால், வாழைத்தார் அறுவடை செய்ய முடியாததால், அவை குலையிலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வாழை விவசாயிகளை கவலையடைச் செய்துள்ளது.
இதுகுறித்து மொளசியைச் சேர்ந்த வாழை விவசாயி சக்திவேல் கூறியதாவது:
வாழை சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை செலவு பிடிக்கும். கரோனா பாதிப்பு காரணமாக வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்க வராததால், அவற்றை அறுத்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் மரத்திலேயே விட்டு விட்டோம்.
இதனால், மரத்திலேயே பழங்கள் பழுத்து காக்கை குருவிகளுக்கு உணவாகி வருகிறது. இதனால், முதலீடு அனைத்தும் வீணாகியுள்ளது. நிலைமையை சீர் செய்ய அரசு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.