தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழகதொழிலாளர்களை அழைத்துவருவதற்கான ரயில் கட்டணத்துக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தோம்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினோம். காங்கிரஸ் அளிக்க முன்வந்த ரூ.1 கோடி தேவையில்லை. தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான செலவை தமிழக அரசே சமாளித்துக் கொள்ளும் என்று தலைமைச் செயலாளர் பதில் கடிதம் எழுதியுள்ளார். இது வருத்தம் அளிக்கிறது.
கரோனா பரவல் குறைவாக இருக்கும்போது ஊரடங்கை நடைமுறைப்படுத்திய மத்திய, மாநில அரசுகள், தற்போது நோய்த்தொற்று உச்சத்தில் இருக்கும்போது ஊரடங்கை தளர்த்தி வருகின்றன. மக்கள் கரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மக்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
மதுக்கடைகள் திறப்பால் தேர்தலில் அதிமுக தோற்கும் என்றரஜினிகாந்தின் கருத்தை வரவேற்கிறேன். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு மத்திய, மாநிலஅரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
காணொலி சந்திப்பு
ஊரடங்கு காரணமாக நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாததால் ஜூம் செயலி மூலம் நேற்று பகல் 12 மணிக்கு கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா இந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஒருங்கிணைத்தார். சென்னையில் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், காணொலி மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.